தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரபல நடிகை மற்றும் பாஜக உறுப்பினரான காயத்ரி ரகுராம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் புதுச்சேரியில் மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்து கோவில் அமைப்பை விமர்சித்துப் பேசினார்.

குறிப்பாக அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்திருந்தார். தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் விமர்சித்திருந்தார். அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதற்கு நடிகையும் நடன இயக்குனரும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை வெளியிட்டு வந்தார். அவை விதிகளை மீறியது என்பதால் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார் காயத்ரி ரகுராம். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் போன் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்தது தொடர்பாக அக்கட்சியினர் காயத்ரி ரகுராம் மீது கடலூர் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் விசிகவினர் மீது காயத்ரி ரகுராம் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.