கொரோனா தொற்று பரிசோதனை ஏழைகளுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும். மேலும் இந்த இலவசம் யாருக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை அரசே தீர்மானிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்திய மக்களுக்கு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தனியார் ஆய்வகங்கள் அனைவருக்கும் இலவசமாக செய்ய முடியாது என்று கூறியதையடுத்து தனது தீர்ப்பை மாற்றியுள்ளது உச்சநீதிமன்றம்.

கரோனா குறித்து மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

இதுகுறித்து உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட உத்தரவில், “கொரோனா வைரஸ் தொற்றுக்கான இலவச சோதனை ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தியுள்ளபடி கிடைக்கும். மேலும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான எந்தவொரு பிரிவினருக்கும் அரசாங்க அறிவிப்பின்படி கிடைக்கும்.

மேலும் அமைப்புசாரா துறைகளில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற பலவீனமான பிரிவுகளில் வேறு யாரெல்லாம் தகுதிபெற முடியும் என்பதை மத்திய அரசும் சுகாதார அமைச்சமும் தீர்மானிக்க முடியும்” என்று கூறியுள்ளது.

அத்துடன் மத்திய அரசு கொரோனா வைரஸ் பரிசோனை யார் யாருக்கு இலவசம் என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவை எடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உலகஅளவில் கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவரும் நிலையில், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வதாரத்தை இழந்து வறுமையில் வாடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அடிப்படை மருத்துவம் கூட மறுக்கப்படும் அவலநிலையில், தனியார் மருத்துவமனை ஆய்வகங்களின் வசதிக்கேற்ப 5-ந்தே நாட்களில் தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது மக்களுக்கு பெரும் வேதனைக்குரிய செய்தியாகும்.