உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துமவனையில் கோவிட்-19 வைரஸ் பாசிட்டிவ்வால் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அந்தச் சோக நிகழ்வுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், டாக்டர் குடும்பத்தார்க்கு இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், அதுபோலவே, ஊரடங்கு காவல் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டுள்ள காவல்துறையினரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

மேலும் வாசிக்க: அப்போலோவின் அலட்சிய செயல்., மக்களிடம் மறைந்த மனிதநேயம்

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஒழிந்துவிடும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16.4.2020 அன்று வர்க்க பேத ஆரூடம் கணித்து அறிவித்திருந்த நிலையில், நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய சூழலில் மருத்துவரின் உயிரிழப்பு என்பது, வைரஸ் பரவலைத் தடுப்பதில் அதிமுக அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் மிகவும் வலியுறுத்துகிறது. விரைவு பரிசோதனைக் கருவிகள் வாயிலாக உரிய முறையிலும் மிகப் பரவலாகவும் சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் தடுப்பு மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

பொதுமக்களையும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் முக்கியமான கடமையை ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கின் விதிமுறைகளை, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், முழுமையாகக் கடைப்பிடித்து, தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

முன்னதாக, அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை தகனம் செய்ய கீழ்பாக்கம் எடுத்து சென்றுள்ளனர். இந்த செய்தி அறிந்து கீழ்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், இறந்த மருத்துவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் படுகாயம் அடைந்துள்ளனர். அதன்பின் அங்கிருந்து உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மற்றொரு ஆம்புலன்ஸில் வேளங்காடு மயானத்துக்கு கொண்டு சென்று இரவோடு இரவாக உறவினர்கள் இல்லாமல், மருத்துவர் உடலை புதைத்து உள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 20 பேர் மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களால் தாக்குதல், சட்டவிரோதமாகத் தடுப்பில் வைத்து தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள், மக்களிடம் கொரோனா தொற்று குறித்த அச்சம் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது. உரிய பாதுகாப்புடன் அடக்கம் செய்யும்போது, இறந்தவர் உடலிருந்து நோய் வேறு மக்களுக்கு பரவாது என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததுதான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு காரணம். மக்களுக்காக சேவையாற்றியவரின் உடலை அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானம் அற்றது. கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.