கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடியை உருவாக்குவதில் இஸ்ரேல் நாட்டின் முக்கிய உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக, இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயை குணப்படுத்த இந்த ஆன்டிபாடி நிவாரணியாக இருக்கும் என்று அந்நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆன்டிபாடி உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸை அழிக்கும் என்று அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

மேலும்: வாசிக்க: கொரோனாவை கட்டுப்படுத்தும் ரெம்டிசிவிர்.. அமெரிக்காவின் புதிய முயற்சி

இதுதொடர்பான பென்னட் வெளியிட்ட செய்தியில், ”கொரோனாவை குணப்படுத்தும் மாற்று மருந்து கண்டுபிடிப்பில் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் பயாலஜிகல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி உடலுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா வைரஸை அழிக்கும்.

ஆன்டிபாடியின் உருவாக்கம் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த நிறுவனம் தங்கள் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும், அடுத்த கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச நிறுவனங்களை அணுகி ஆன்டிபாடியை வணிக நோக்கத்தில் உற்பத்தி செய்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு செல்லில் இருந்து எடுக்கப்பட்டதுதான் மொனோகுலோனல் என்ற ஆன்டிபாடி. இது கொரோனா வைரஸைக் கொல்லும் திறன் பெற்றது என்று அந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளையும் இஸ்ரேல் ஆய்வகம் பரிசோதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.