கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு ஆர்வம் காட்டும் அதிமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுக மற்றும் தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலிரும் எதிர்ப்புகள் வலுகின்றன. பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: சென்னையில் கொரோனா வைரஸ் பரவ இதுதான் காரணமாம் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி

கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், மதுக்கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை நோய் தடுப்பில் காட்டவில்லை எனவும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொரோனா விவகாரத்தில் அதிமுக அரசின் அணுகுமுறைகளையும், முடிவுகளையும், பார்த்தால் அது தொடர்பான முழுமையானபார்வையும், எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பும் போதிய அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது.

புள்ளிவிவரங்களை சொல்லி சமாதானப்படுத்தும் முயற்சி தெரிகிறதே தவிர அடிப்படையான உண்மைகளை வெளியிடும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. அதிமுக அரசில் அறிவியல் பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை, அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், வல்லுநர்கள் மற்றும் சான்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை பரிசீலனை செய்யும் மனநிலையில் இல்லை. தாமதமாகவேனும் உணரும் நிலைமை இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் காணப்படவில்லை.

மே 7ஆம் தேதி மதுக் கடைகளைத் திறப்பது என்ற முடிவால், நோய்த் தொற்று அதிகமாகும் என்பதால் அதனைக் கண்டிப்பதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐயாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

மேலும், கொரோனோ போரில் முன்கள வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத தமிழக அரசின் மெத்தனத்தை கண்டிக்கிறோம்.

மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை திறப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக அரசைக் கண்டித்தும் நாளை மே 7-ம் தேதி அனைவரும் கருப்புச்சின்னம் அணிந்து, காலை 10 மணிக்கு அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று 5 பேருக்கு மிகாமல் தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்புவது என திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச்சின்னம் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள் அணியப்போகும் கருப்புச்சின்னம் அதிமுக அரசின் கண்களை திறக்கட்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.