கொடநாடு வீடியோ விவகாரத்தில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.
 
கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவண படம் ஒன்றை வெளியிட்டார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதாலேயே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
 
இதையடுத்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தது.
 
அந்த புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஆவண படத்தை வெளியிட்ட மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்த ஆவண படம் வெளியிடப்பட்டதாகவும், தனக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டை கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மேத்யூ சார்பில் வாதிடப்பட்டது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, முதல்வருக்கு எதிராக தவறான குற்றச்சாட்டை பரப்பியதால், இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
வழக்கு பதிவு ெசய்ய போதிய முகாந்திரம் உள்ளது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான்.
 
எனவே, இந்த வழக்கில் போலீசார் 4 வாரத்திற்குள் பதில் தரவேண்டும். அதுவரை மேத்யூ சாமுவேல் மீதான எப்ஐஆருக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
 
அதிமுக வட்டாரத்தில் இந்த தடை எடப்பாடி கோஸ்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தினகரன் மற்றும் ஒபிஎஸ் கோஸ்டிகள் மகிழ்வுடன் உள்ளதாக உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன