தாயே தனது 2 வயது மகனை மிருகத்தனமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து, கொலை ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் தாய் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலபாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (37). இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பருக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு கோகுல் (4) மற்றும் பிரதீப் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையால் துளசி, சொந்த ஊரான ராம்பள்ளிக்குச் சென்றுவிட்டார்.

இதற்கிடையே துளசி, கணவன் இல்லாத நேரத்தில் தனது இளைய மகன் பிரதீப்பைக் கொடூரமான முறையில் தாக்கி, அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். குழந்தையின் முகத்தில் கைகளாலும், செருப்பாலும், மிருகத்தனமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரின் பேரில், துளசி மீது கொலை ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை, துளசியைக் கடந்த 29 ஆம் தேதி ஆந்திராவில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட துளசியை காவல்துறையினர் விழுப்புரம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக கைது செய்யப்பட்ட துளசியிடம், சத்தியமங்களம் காவல் நிலையத்தில் செஞ்சி டிஎஸ்பி தலைமையில் மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் துளசியும் அவரது கணவரும் சென்னையில் வசித்தபோது பிரேம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீடியோ கால் மூலம் இருவரும் அடிக்கடி பேசிப் பழகியுள்ளனர். அப்போது துளசியிடம் ஆசை வார்த்தையில் பேசிய பிரேம்குமார், கணவரை விட்டுவிட்டு வந்தபிறகு துளசியை இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளான்.

மேலும் துளசியிடம் பெரிய மகன் உன்னை போன்று இருப்பதாகவும், இளையமகன் துளசியின் கணவரை போல் இருப்பதாகவும் கூறி, குறைமாதத்தில் பிறந்த இரண்டாவது மகனை அடித்து துன்புறுத்தி, அதனை வீடியோவாக எடுத்து தனக்கு அனுப்புமாறும் வலியுறுத்தியதாகவும் விசாரணையில் துளசி கூறியுள்ளார்.

இந்நிலையில் பெற்ற குழந்தையை சித்ரவதை செய்யும் அளவுக்கு துணிந்த துளசி, மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், அவருக்கு மனநல கோளாறு இல்லை என்று மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர்.

இதனையடுத்து செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில் துளசியை சத்தியமங்கலம் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டார். மேலும் இதற்குத் தூண்டுகோலாக இருந்த பிரேம்குமாரைக் கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் சென்னை விரைந்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்: தமிழ்நாடு அரசு