தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கல்லூரி காலத்தில் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசியுள்ளேன் என்று நடிகர் சரவணன் கூறியதற்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாயளர்களுடன் கலந்துரையாடுவார். அந்த வகையில் வார இறுதி நாளான நேற்று பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கமல்ஹாசனின் பேசினார்.

அதில் ஒரு டாஸ்க்கின் போது இயக்குனர் சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக நடிகை மீராமிதுன் கூறிய குற்றசாட்டு குறித்து கமல்ஹாசன் பேசினார். மீராமிதுன்னுக்கு குறும்படமும் ஒளிபரப்பானது.

தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். மேலும் பேசிய அவர், பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் பேருந்துகளில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, தனது கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.

பதிலுக்கு, பாருங்கள் சரவணன் கூட அதைக் கண்டித்திருப்பார் போல என்று கமல்ஹாசன் கூற, அதை மறுத்து, தானே கல்லூரிக் காலத்தில் அப்படி செய்திருப்பதாக நடிகர் சரவணன் ஒப்புக்கொண்டார். அதனை சமாளித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், சரவணன் இப்போது அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று சமாளித்துவிட்டார். அதற்கு அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டினர்.

இந்த வீடியோவை பாடகி சின்மயிக்கு சமூகவலைதளத்தின்ல் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டுள்ளசின்மயி, பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள். அதுவும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பார்வையாளர்களும், பெண்களும் கைதட்டுகின்றனர்” என்று கூறி தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.