பீகார் மாநிலம் பக்சரில் கொரோனவால் உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட உடல்கள் கங்கை ஆற்றின் நதிக்கரையில் கரை ஒதுங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கொரோனா பரவும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு உத்தரபிரதேசத்தின் எல்லையிலுள்ள பீகார் மாநிலம் பக்சரில், கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் COVID உயிரிழப்புகள் என அறிவிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கங்கா ஆற்றின் கரையில் கொட்டப்பட்டதால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் வீங்கிய நிலையில் உள்ள கொரோனவால் இறந்த இந்த சடலங்களை உண்பதற்காக கழுகுகளும் நாய்களும் பெருமளவில் வந்து குவிவதால், குடிநீருக்காக இந்த கங்கை நதியின் நீரை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இவை கொரோனா வைரஸை வேகமாக பரப்புகின்றன என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கரை ஒதுங்குவது குறித்து அந்த மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால், இதுகுறித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளனர் அப்பகுதி மக்கள். மேலும் நிர்வாகத்தின் அறிக்கையிலிருந்து இறப்பு எண்ணிக்கை முற்றிலும் வேறுபட்டுள்ளது என்றும், இங்கு 100க்கும் மேற்பட்ட சடலங்கள் கங்கை நீரில் மிதப்பதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவுக்கு முன்னர் சடலங்களை எரிக்க ஆறாயிரம் ரூபாய் வரை செலவான நிலையில், தற்போது விறகு முதல் சம்பிரதாய பொருட்கள் என்று அனைத்து விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டதால் 15 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் பணத்திற்கு வழி இல்லாதவர்கள் சடலங்களை அப்படியே நதியில் விட்டு செல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

[su_image_carousel source=”media: 23123,23124″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

புனித நதியாம் கங்கை நதியை தூய்மைப்படுத்த ‘நவாமி கங்கே’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்த நதிக்கரையில் மின்மயானங்களை அமைத்திருந்தால் சாமானியர்களுக்கு அது உதவியாக இருந்திருக்கும். மேலும், சடலங்களை இதுபோல் நதியில் விட்டு செல்வதால் இந்த பகுதி மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று அப்பகுதியில் உள்ள சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பக்சர் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், “சுமார் 40- 45 உடல்கள் மிதந்து காணப்பட்டன. சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டதாகத் தெரிகிறது என்றார். மேலும் அவை வீங்கியுள்ளன, குறைந்தது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை தண்ணீரில் உள்ளன. சடலங்கள் எங்கிருந்து வருகின்றன, உ.பி.யில் எந்த நகரம் என்று நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து பக்சர் மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பான புகார் என்னிடம் வந்திருக்கிறது, நதிக்கரையை சுத்தப்படுத்தவும் தேவையான நடவடிக்கையை எடுக்கவும் அப்பகுதி தூய்மை பணி அலுவலரிடம் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

சடலங்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்று பீகார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் உத்தரபிரதேச அரசு இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் அரசாங்கங்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டத் தொடங்கி உள்ளன.

இந்த குற்றச்சாட்டில் சிக்கிய இரு மாநிலங்களில், உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான யோகி அரசாங்கமும், பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் தலைமையிலான அரசாங்கமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழு: உச்சநீதிமன்றம்