மன்னார்குடி அருகே ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலத்தில் எண்ணெய் பரவியதால் நெல் வயல் நாசமடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் ஒன்றியம் பனையூர், கோமளா பேட்டை, கீழ மருதூர் ஆகிய பகுதிகளில் ஓஎன்ஜிசி மூலம் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, நல்லூர் கிராமத்தில் ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் நரிமனத்துக்குக் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் பனையூர் கிராமத்தில், சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் விளை நிலத்துக்குக் கீழே செல்லும் கச்சா எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறும் கச்சா எண்ணெய், விளைநிலம் முழுவதும் பரவி வருகிறது.

இதுகுறித்துத் தகவலறிந்த நில உரிமையாளர் விவசாயி சிவக்குமார் மற்றும் அப்பகுதி விவசாயிகள் நிலத்தைப் பார்வையிட்டு, தொடர்ந்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை பார்வையிட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயி சிவக்குமார் கூறும்போது, ”தற்போது குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் தெளிப்பு செய்துள்ளேன். இன்று அதிகாலை தண்ணீர் பாய்ச்சுவதற்காக வாய்க்கால் மடைகளைச் சரிசெய்து விட்டுச் சென்ற நிலையில் தற்போது கச்சா எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் பரவி வருகிறது.

நிலம் பழைய நிலைக்குத் திரும்ப ஓரிரு ஆண்டுகள் ஆகிவிடும். எனவே, ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனடியாக வந்து நிலத்தைப் பார்வையிட்டு உடைப்பைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதோடு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூலை 31க்குள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு