தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சிறார்/ குழந்தை இலக்கியப் படைப்புகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற சிறார் இலக்கிய நூலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பாலபாரதி தமிழகத்தின் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். தொடர்ந்து சிறார் இலக்கியப் பங்களிப்புகளில் ஈடுபட்டு வருபவர். எழுத்தாளர் பாலபாரதிக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் திரு.யெஸ்.பாலபாரதி அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். மேலும் பல படைப்புகளைத் தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களைத் தொடட்டும்” என தெரிவித்துள்ளார்.

மரப்பாச்சி சொன்ன ரகசியம்:

யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற சிறார் நாவல், குழந்தைகள் பாலியல் சித்திரவதை தொடர்பாகச் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசியிருக்கிறது.

பூஜா என்ற மாணவியை அவர்களது வீட்டுத் தரைதளத்தில் வசிக்கும் பெரியவர் பாலியல் சித்திரவதை செய்கிறார். இதனால் உளவியல் ரீதியில் பூஜா பாதிக்கப்படுகிறாள். ஆனால், வழக்கம்போல் பெரியவரின் மிரட்டலால் அதை வெளியில் சொல்லப் பயப்படுகிறாள்.

இதனால் குழப்பமான மனநிலைக்கு உள்ளாகிறாள். இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள் என்பதே கதை. குழந்தைகள் மீது பெற்றோர் எப்படி அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் அவர்களுடன் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும்,

துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் அவர்களைப் பேசவைக்க உந்துதலாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள இந்த நாவல் உதவுகிறது. அதேநேரம் இந்தப் பிரச்சினையிலிருந்து மீளும் முறைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குழந்தை பாலியல் சித்திரவதைதான் கதையின் மையம் என்றாலும், இன்றைக்கு நம் குழந்தைகளை ஆக்கிரமித்துள்ள வேறு பல முக்கிய பிரச்சினைகளையும் கதை தொட்டுச் செல்கிறது. மறந்துபோன விளையாட்டுகள், நடனங்கள், பார்வைக் குறைபாடு, குட் டச், பேட் டச் எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களும் கதைக்கு கூடுதல் அர்த்தம் சேர்க்கின்றன.

கோவில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம்: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு