அதிமுக தமிழ்நாடு

ஊழல் வழக்கு: எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கம்

லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் மற்றும் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து, கடந்த 10 ஆம் தேதி எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஏராளமான சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு நிதி ஆவணம், வங்கி லாக்கர் சாவிகள், ரூ.13 லட்சம் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 12) முடக்கி வைத்தனர். குறிப்பாக, ரூ.2 கோடி வைப்பு நிதி வைக்கப்பட்டிருந்த வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளனர்.

மேலும், எஸ்.பி.வேலுமணி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில், அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சோதனையின் போது சிக்கிய அனைத்து நிறுவனங்களின் வங்கி கணக்குகளையும் முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி மீது ரூ.811 கோடி ஊழல்: 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.