முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி கடந்த 2013-16 ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவருக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி தனது சகோதரர் அன்பரசன், பினாமி நிறுவனங்களுடன் இணைந்து அரசு விதிகளை மீறி ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எஸ்.பி.வேலுமணி மட்டுமின்றி, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன், கே.சி.பி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சந்திரபிரகாஷ், கே.சி.பி நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் உரிமையாளர் முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ராஜன் ஆகியோர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் கூட்டுச்சதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 9 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

[su_image_carousel source=”media: 25553,25554″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடியும், கோவை மாநகராட்சியில் ரூ.346 கோடியும் மொத்தம் ரூ.811 கோடிக்கு ஊழலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் வேலுமணியின் கோவை வீடு உள்பட அவருக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 10) காலை முதல் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள வேலுமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சோதனையைத் தொடர்ந்து, கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் வேலுமணியின் உறவினரான, கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அவரது வீட்டில் வரவு, செலவு புத்தகம், ஹார்ட் டிஸ்க் உள்பட பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

https://www.facebook.com/savenra/posts/6821722944520237

மேலும் டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட வேலுமணியின் நண்பரும், கே.சி.பி. நிறுவன மேலாண் இயக்குநருமான சந்திரபிரகாஷ் வீட்டிலும், கே.சி.பி நிறுவனத்தின் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் சோதனை நடந்து வருகிறது. அப்போது, சந்திரபிரகாஷ் நெஞ்சுவலி ஏற்படுவதாகக் கூறி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கே.சி.பி நிறுவனத்தினர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாகங்களின் திட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துச் செய்து வந்தனர். மாநகராட்சியில் இந்நிறுவனத்தினர் மேற்கொண்ட திட்டப்பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தொடர்ச்சியாக பல்வேறு தரப்பில் புகார்கள் குவிந்தன.

இந்நிலையில் மேற்கண்ட நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 11) சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டு அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன்: வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!