அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள் என காட்டமாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கமல் எழுதிய கடிதத்தில், “இக்கடிதத்தை ஒரு பொறுப்புள்ள, நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். முதலில் உங்களுக்கு கடந்த 23-ஆம் தேதி கடிதம் எழுதினேன். அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இதற்கு அடுத்த நாளே முறையாக திட்டமிடப்படாமல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
பணமதிப்பிழப்பின் போது எப்படி ஏழைகள் தங்களது சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனரோ அதே போல் இந்த முறையாக திட்டமிடப்படாத ஊரடங்கால் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீங்கள் இந்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். கரோனாவை ஒழிக்க இரவு பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கை தட்டுங்கள் என்றவுடன் அனைவரும் அதை செய்தனர்.
ஒருபுறம் பால்கனிகளில் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ஏழைகளோ அடுத்த வேளை உணவான சப்பாத்தி செய்ய போதுமான எண்ணெய் இல்லாமல் போராடுகிறார்கள். தலை மேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது.
நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காகவே இயங்கும் பால்கனி அரசாக நீங்கள் இருக்க விரும்பமாட்டீர்கள். ஏழை மக்களை புறக்கணிக்கும் அரசுகள் கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. தினக்கூலி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி டிரைவர்கள், புலம்பெயர்ந்த மக்கள் என லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள்.
கரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஏழைகள் பசி, சோர்வு, வறுமையால் வாட வழி வகை செய்து வருகிறோம். இது கோவிட் 19 உடன் ஒப்பிடும் போது மிகவும் அபாயகரமானது.
சீனாவில் டிசம்பர் 8-ஆம் தேதியே கரோனா நோய் பாதித்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகின. கரோனாவின் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை உலக நாடுகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே அறிந்து கொண்டன. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி அறியப்பட்டார். இத்தாலிக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
ஒரு பிரச்சனை பூதாகரமாவதற்கு முன்னரே அதற்கு விடை கண்டுபிடிப்பவர்தான் தொலைநோக்குடைய தலைவர். உங்களின் தொலைநோக்கு இந்த முறை பொய்த்துவிட்டது.
உங்கள் அரசை யாராவது குறை கூறினாலும் அவர்கள் தேசவிரோதி என்று முத்திரைக் குத்தப்படுகிறார்கள். யாரெல்லாம் அக்கறை கொண்டுள்ளார்களோ அவர்களின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரமிது. நாங்கள் கோபத்தோடு உள்ளோம். ஆனாலும், உங்களோடுதான் உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம், “நீங்கள் ஏன் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், தப்லிகி ஜமாத்துக்கும் கடிதம் எழுதி, அவர்களின் தோல்வியைச் சுட்டிக்காட்டாது. அரசின் உத்தரவுகளை மதிக்காத குடிமக்களுக்குக் கடிதம் எழுதுங்கள். நீங்கள், தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தோல்வியடைந்து விட்டார்கள் என்று சொல்கிறீர்களா.. தமிழக எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கு முதலில் கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு எதாவது பிரச்னை இருந்தால் முதலில் மாநில அரசிடம் முறையிடுங்கள்.
மோடிஜிக்கு கடிதம் எழுதுவது ஒரு டிராண்டாகிவிட்டது. நேற்று அனைவரும் ஒற்றுமையைக் காட்டினார்கள். நீங்கள் அதில் பங்கேற்கவில்லை என்று வேதனையாக இருக்கிறீர்களா. எது உங்களை தொந்தரவு செய்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடும் உழைப்பை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். மிக மேம்போக்கான கடிதத்தை எழுதாதீர்கள். உரிய தகவல்களோடு எழுதுங்கள்” என்று கடுமையாக கமலை விமர்சித்துள்ளார்.