உலகம் கொரானா தேசியம் மருத்துவம்

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் திரிபு ‘சர்வதேச அளவில் கவலைக்குரியது’- WHO

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் B.1.617 என்ற கொரோனா வைரஸ் திரிபு ‘சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு’ (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த திங்கள் கிழமை வரை 3 கோடியே 48 லட்சம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இந்து ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 2.5% மட்டுமே.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள B.1.617 என்ற கொரோனா வகையும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சுலபமான பரவல், தீவிர நோய் தொற்றை உடலில் உண்டாக்குதல், இவற்றை எதிர்கொள்ள உடலிலுள்ள நோய் எதிர்ப்பான்களுக்கு (antibodies) குறைவான ஆற்றலே இருத்தல், இவற்றுக்கு எதிராக சிகிச்சை மற்றும் தடுப்பூசியின் வீரியம் போதிய அளவு இல்லாமல் போவது ஆகிய பல தன்மைகளில் ஏதாவது ஒன்றை கொண்டிருக்கும் மரபணுப் பிறழ்வு ‘கவனத்துக்குரிய திரிபு’ (variant of interest) என் வகைப்பாட்டிலிருந்து ‘கவலைக்குரிய திரிபு’ என்ற வகைப்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பால் நிலை உயர்த்தப்படும்.

தற்போது இந்தியாவில் பரவிவரும் இந்த B.1.617 கொரோனா திரிபு வகையை கவனத்துக்குரிய திரிபு வகை பட்டியலிலிருந்து, ‘சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு’ (variant of global concern) என்று உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

இந்தத் திரிபில் உள்ள B.1.617 மரபணுப் பிறழ்வு பிற திரிபுகளை விட மிகவும் சுலபமாகப் பரவக் கூடியது என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், இது குறித்த மேலதிக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் திரிபின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுகள் மட்டுமே ‘சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு’ என வகைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்தியாவில் நிலவி வரும் கொரோனா இரண்டாம் அலைக்கும் இந்தத் திரிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இது கொரோனா மூன்றாம் அலைக்கும் வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள், இந்த புதிய கொரோனா திரிபுக்கு எதிராக செயல்படும் திறன் உடையவை, எனினும் இது திரிபுக்கு எதிரான தடுப்பூசிகளின் வீரியம் குறைந்து இருப்பதற்கான சில ஆதாரங்கள் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நீக்க உலகளாவிய டெண்டர் கோர முடிவு: தமிழக முதல்வர் அதிரடி

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.