ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பணிக்கு விண்ணப்பம் ஏன் சர்ச்சையாகி உள்ளது..

இதற்கு முன்னர் 1945,1980 மற்றும் 1990களில் ஜீயர்கள் நியமனமாகியுள்ளனர். அப்போதெல்லாம் தற்போது போலவே ஜீயர் நியமனத்திற்கு விளம்பரம் செய்து விண்ணப்பம் கேட்டுள்ளனர். அதனால் இது புதிதல்ல.

ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு 5 அறங்காவலர்கள் உண்டு. தென்கலை 1, வடகலை 1, ஸ்தலத்தார் 1, ஸ்மார்த்தா 1, மாத்வா 1 இவர்கள் சேர்ந்து கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.

இது 1942 இல் அமைக்கப்பட்ட நீதிமன்ற நிர்வாகத் திட்டம், 1959 இல் அறநிலையச்சட்டம் அமுலுக்கு வந்தபின் நிர்வாகத்திட்டம் மாற்றப்பட வழி உண்டு. மாற்ற முயற்சித்தவர்கள் மாற்றப்பட்டனர் அல்லது மாறிப்போகினர்.

ஜீயர்கள் எவராயினும் தமிழே பெருமாளுடன் பேசும் மொழி என்பார்கள். தமிழ் பாசுரங்களை மடத்தினில் ஒலிக்கச் செய்வார்கள். ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பணிக்கு இந்துக்கள் தகுதி திறமை அனுபவம் இது மட்டுமே அளவுகோலாக ஏற்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பணிக்கு சில நிபந்தனைகள் விதித்து, அதற்குட்பட்டு விண்ணப்பிக்க கேட்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்த்த அல்லது மாத்வ பிராமணர்கள் விண்ணப்பிக்க முடியாது. திருமண் சாற்றிக் கொண்டதில், வடகலை திருமண் சாற்றியோர் விண்ணப்பிக்க முடியாது.

இதுவரையில் அரசுத்துறை சார்ந்தவர்களே பிறரை நியமிக்க முடியும். இராமானுஜரை முதல் ஜீயராகக் கணக்கிடுகின்றனர். இப்போது காலியாக உள்ள ஜீயர் பதவிக்கு நியமனம் செய்யப்படுபவர் 51வது ஜீயர்.

எண்ணிக்கையிலான பிரி நூல் குறுக்கே அணிந்தாலும், கட்டுக்குடுமி உச்சியில் இருந்தாலும், பஞ்ச கச்சம் இறுக்கிக்கட்டினாலும், தென்கலை அல்லாதோர் ஜீயர் ஆகிவிட முடியாது. பின் யார்தான் ஜீயராக பதவிக்கு வர முடியும்.

ஜீயர் தென்கலை வைணவராக இருக்க வேண்டும். நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்றுணர்ந்தவராக இருக்க வேண்டும். தனது குடும்ப உறவுகளை துண்டித்தவராகவும், துண்டிக்க உறுதி தருபவராகவும் இருத்தல் வேண்டும்.

வைணவ வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், பூஜை முறைகள், அறிந்தவராக இருத்தல் அவசியம். இத்தகைய தகுதி உள்ளவர் எவராயினும் விண்ணப்பிக்கலாம். இது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது.

கோவில்களின் பூசைகளை செய்பவர்களுக்கும் பொதுமக்களின் வழிபாட்டுக்கும் இணைப்பை தருவது ஜீயரின் வேலை. நிதி நிலையையும் பூஜைகளின் ஒழுங்கையும் சேர்த்தே கவனித்த தொடக்க கால ஜீயர்கள் உண்டு .

பின்னர் அரசுகளினால் தரப்பட்ட இலவச நிலங்கள், பணிகளுக்கான மான்ய நிலங்கள் அரசர்களின் காணிக்கைகளால் நிரப்பப்பட்டபோது பூஜை முறைகளை மட்டும் ஜீயர்கள் கவனிக்க, சொத்துகளை அரசு பிரதிநிதிகள் கவனித்தனர் .

எந்த அரசுகள் வந்தாலும் இந்த நிலையே நீடித்தது. இஸ்லாமிய அரசர்களாயினும், மராட்டிய அரசர்களாயினும், தெலுங்கு கன்னட அரசர்களாயினும் இதுவே நிலைமை. வெள்ளையன் ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது. சுதந்திர இந்தியாவிலும் இந்த நிலையே நீடித்து வருகிறது.

இதில் பூஜை செய்கிறவர்கள் பின்னாளில் தங்களை மற்றவரை விட உயர்ந்தவராகக் காட்டிக் கொண்டனர். வழிபட வருகிற மக்களை விட பெருமாளிடம் அருகே இருப்பவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டு வடகலை திருமண் அணிந்தனர்.

இந்த பூசகர்கள் திரைமறைவில் மூலவரை உற்சவரை அலங்கரிக்கையில் ஆராதணையில் ஒழுங்காக செய்கின்றனரா என சந்தேகத்தை வழிபாட்டாளர் மத்தியில் ஏற்படாமல் இருக்க தென்கலை சார்பாக ஜீயர்கள், கருவறையில் நடப்பதைக் கண்காணித்தனர்.

இதுவே வடலை தென்கலை மோதலின் மையப்புள்ளி என்றறிக..

பூஜை வைப்பவர்கள் திருமணம் செய்து கொண்டு வாரிசுகளை தயாரித்து அடுத்த வேலைக்கு உரியவராயினர். ஜீயர்களும் அவ்வாறு இருந்தால் பொதுச் சொத்துகளை வாரிசுகள் கொள்ளையிடுவர் என்பதால் ஜீயர்களான பின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்படும் மரபு.

ஜீயர் இறந்தாலும் அந்த பிணம் அவருடைய உறவுகளுக்கு செல்லாது. கோவில் நிர்வாகமே அடக்கம் செய்யும். அதற்கான இடுகாடு உள்ளது. அங்கு ஜீயர்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுவர். இதுவரை 50 ஜியர்கள் அங்கு அடக்கமாகியுள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஜீயரானதும் அவர் வசிப்பதற்கு கோவிலின் வீடு தரப்படும் அங்கேயே ஜீயர் தங்கிக் கொள்வார். அங்கு பிரபந்தப் பாடம் சொல்லித்தரப்படும். அவருக்கு மாதம் சிறிது ரொக்கமும், ஆராதணையில் பங்கும் தரப்படும்.

கோவில் கருவூலத்தின் சாவிகளில் ஜீயரிடம் ஒரு கொத்து சாவி இருக்கும். கருவூலம் திறக்கும் போதும், மூடும் போதும் ஜீயர் உடன் இருப்பார். தனி முத்திரையும் ஜீயருக்கு உண்டு. கருவூலம் பூட்டியதும் அவரது சாவியை அவர் எடுத்து செல்வார்.

இதர செட் சாவிகள் இதர ட்ரஸ்டிகளிடமும் அரசு அலுவலரிடமும் இருக்கும். திரையிட்டு அலங்காரம் செய்கையில் புணுகு சாற்றுதல் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும். அப்போது ஜீயர் திரைக்குள் சென்று பெருமாளின் சாற்றுப்படியைக் கவனிப்பார். இதுதான் அவரது பணி. இந்த பணிக்கு வரவில்லை என்றாலும், பெருமாள் பணி நிற்காது.

ஒரு ஜீயர் இறந்தால் அடுத்த ஜீயர் எங்கிருந்து வருவார். சாதாரணமாக சிவ வைணவ மடங்களில் ஆதினம் இருப்பார்கள். அவர்களுக்குத் துணையாகத் தம்பிரான்கள், இளைய ஆதினங்கள், சீடர்கள் இருப்பார்கள். சில ஆதினங்களில் மூத்த ஆண் வாரிசுகள் இருப்பார்கள்.

பதவியில் இருப்பவர் இறந்தால் இவர்களில் யாராவது அடுத்த வாரிசாக ஆதினகர்த்தராகி விடுவார்கள். இதில் அரசுத்துறை தலையிடுவதில்லை. ஆனால் ஜீயர் விஷயத்தில் இத்தகைய ஏற்பாடுகள் இல்லை. சீடர் இல்லை. ஆண்வாரிசு தொடர்பு இல்லை. இளைய பட்டம் இல்லை. ஆகையால் ஒரு ஜீயர் மரணித்தால் அடுத்த ஜீயரை அரசுதான் பொது ஆளாக நின்று கவனித்து நியமிக்கும்.

திருவரங்கத்தைப் பொறுத்து கடந்த 100 ஆண்டுகளாக தென்னாச்சார்ய சம்ப்ரதாய சம்ப்ரக்ஷ்ண சபா தங்களது பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து ஜீயரைப் பரிந்துரைப்பார்கள். இவர்கள் பரிந்துரைப்பதை கோவில் அறங்காவலர்கள் குழு தீர்மானமாக்கும். இதனை அரசப் பிரதிநிதி அரசின் துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார்.

இந்த நிலை 1914 இல் இந்த சபா தொடங்கப்பட்ட காலத்திலிருந்து உள்ளது. இந்த தென்னாச்சார்ய சபாவில் தமிழை, பெருமாள் பேசிய அருளிப்பாடாகக் கருதும் வைணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

வைணவர்களில் ரெட்டியார், செட்டியார், யாதவர், கள்ளர், அம்பலக்காரர் ,நாய்க்கர், நாயுடு, ஐயங்கார், சாத்தாத வைணவர் என எல்லோரும் உள்ளனர். பாகவதர்களை உள்ளடக்கிய இந்த சபா தரும் நபரை ஜீயராக நியமிப்பதால் ஒட்டு மொத்த வைணவமும் ஜீயரை அங்கீகரித்ததாகிறது.

ஜீயர்களுக்கும் துறைக்கும் பல வழக்குகள் நடந்துள்ளன. அனைத்து வழக்குகளிலும் ஜீயர்கள் கோவிலின் ஊழியர் என தீர்ப்பாகியுள்ளது. சில பிரத்யேக உரிமைகள் அந்த பதவிக்கு உண்டு. அதன்படி அவருக்கு கல்விச் சான்று தேவையில்லை. பணி ஓய்வு இல்லை.

ஜீயர் இறந்தால் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இதனால் இவர் கோவில் பணியாளர்களிலிருந்து வேறுபடுகிறார். இவர் தனது கைங்கர்யத்தை சரியாக செய்யவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படலாம். இதனால் இவர் அரசு பணியாளராகிறார் என்றிக.

1959 சட்டத்தின்படி ஒரு பட்டியல் இனத்தவர் அறங்காவலர்களில் இருக்க வேண்டும் என்பதால், ஸ்மார்த்தர் கணக்கில் பட்டியல் இனத்தவரை நியமிக்கின்றனர். இப்படி நியமிக்கப்பட்டதில் சங்கிலி என்பவர் பட்டியல் இனத்தவர் ஸ்மார்த்த கணக்கில் இருந்தார்.

மற்றவர்கள் ஐயங்கார்களாக இருந்தனர். கோவில் உதவி ஆணையர் வி.கே.வேலுசாமி, இந்த நிர்வாக அமைப்பில் 1981இல் ஜீயரை பணி நீக்கம் செய்ய தீர்மானம் வைக்கின்றனர். திருப்பணியில் ஏற்பட்ட முரண்பாடின் விளைவாக ஜீயர் மீதான நடவடிக்கையில் போய் நின்றது.

தீர்மானத்தில் ஜீயர் என்ற ஐயங்காருக்கு எதிராக மூன்று ஐயங்கார்களும், 1 உயர்சாதி மாத்வா டிரஸ்டியும் ஒன்று சேர்கையில் அதனை எதிர்த்து தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்தது பட்டியல் இனத்தை சேர்ந்த திருவானைக்காவல் சங்கிலி ஆவார்.

அவர் தீர்மானத்தை எதிர்ப்பதற்கு தெரிவித்த காரணம் இதுதான். ‘ஜீயரோ சந்நியாசி. அவர் எந்த ரூபாயும் ரெங்க நாதருக்கு நஷ்டம் ஏற்படுத்தவில்லை. பணிக்கு வராததற்கு பணிநீக்கம் செய்வதை தான் ஏற்க முடியாது’ என்றார்.

ஐயங்கார்கள் அறங்காவலர்களில் பெரும்பாண்மை வகித்ததின் காரணமாக ஜீயர் என்ற ஐயங்காரை நீக்கி, இயற்றியத் தீர்மானப்படி ஜீயர் பணி நீக்கம் செய்யப்பட்டார். பட்டியல் இன சங்கிலியின் எதிர்ப்பு எடுபடவில்லை.

பதவி இழந்த ஜீயர் நீதிமன்றம் சென்றார். அறங்காவலர் குழு பெரும்பாண்மை தீர்மானப்படி ஜீயரை நீக்கியது செல்லும் என்றனர் நீதிபதிகள். பணி நீக்கம் செய்யப்பட்ட 49 வது ஜீயர் முனிசிபல் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின் ஜீயராக நியமணம் ஆனவர். பணி நீக்கிய பின் கோவில் மடத்தில் இருந்தார். சில காலம் கழித்து இறந்து போனார்.

அப்போது ந.சீனிவாசன் துணை ஆணையர். கள்ளரில் வைணவர். ஆழ்ந்த வைணவ பக்தியாளர். திருமண் இல்லாமல் பணிக்கு வரமாட்டார். இத்தகையவர் என்பதால் இறந்த 49வது ஜீயர், பணியிலிருந்து நீக்கப்பட்ட ஜீயராக இருந்தாலும் கோவில் இடத்திலேயே இதற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஜீயர்கள் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

50வது ஜீயரும் அங்கேயே அடக்கமானார். இப்போது 51 வது ஜீயர் பதவி 3 ஆண்டுகளாக காலியாக உள்ளது. மூன்று வருடம் ஏன் ஜீயர் பதவியை அதிமுக அரசு காலியாக வைக்க வேண்டும் .. அது தவறு அல்லவா.. என நடுநிலையோர் கேள்வி எழுப்பினால் அதன் நியாயம் நல்லது தானே.

பார்ப்பனர்- ஐயங்கார் என்ற பிறப்பின் தகுதி மட்டுமே அளவுகோலாக ஏற்க முடியாது. இதில் கோயிலில் சமூகநீதி அடிப்படையில் கருவறையில் இருக்கும் தீண்டாமை ஒழிப்பதற்கு அனைவரும் போராடுவோம் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் குரலையும் ஒதுக்கி தள்ளி விட முடியாது தானே..

தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கான மாநில அளவிலான தலைமை காஜி (மதகுரு), மாவட்ட அளவிலாள காஜிகளை “காலம் காலமாக” விண்ணப்பம் பெற்றே தேர்ந்தெடுத்து அறிவிக்கிறது என்ற நடைமுறையும் யாவரும் மறுக்க முடியாதது தானே.

கங்கையில் மிதக்கும் 100க்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள்; மாறிமாறி குற்றம்சாட்டும் பீகார்- உ.பி. அரசுகள்