அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கியதற்காக கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்குவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உலகப்புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த 16 ஆம் தேதி கோலாகமாக நடத்தப்பட்டது. போட்டியில் 33-வது எண் அச்சிடப்பட்ட பனியன் அணிந்த கண்ணன் என்பவர் அதிக மாடுகளை அடக்கியதாகவும், அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டில் மோசடி நடைபெற்றிருப்பதாக இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “ஜல்லிக்கட்டு தொடங்கி முதல் 3 சுற்றுகளில் பங்கேற்ற ஹரிகிருஷ்ணன் (எண் 33) 5 காளைகளை பிடித்ததார். 3 ஆம் சுற்றின் போது அவர் காயமடைந்ததால் களத்தில் இருந்து வெளியேறினார்.

ஹரிகிருஷ்ணன் அணிந்திருந்த 33 ஆம் எண் உடைய பனியனை சட்டவிரோதமாக, கண்ணன் என்பவர் அணிந்துகொண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார். ஹரிகிருஷ்ணன் அடக்கிய 5 காளைகளுடன், கண்ணன் அடக்கிய 8 காளைகளை சேர்த்து அவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடாக போட்டியில் கலந்து கொண்டு அதிக மாடுகளை பிடித்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு முதல் பரிசை வழங்குவது ஏற்புடையதல்ல. இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலன் இல்லை.

எனவே அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான முதல் பரிசை வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். உரிய விசாரணை நடத்தி, தகுதியான நபருக்கு முதல் பரிசை வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்ட கண்ணன் என்பவருக்கு அந்த பரிசை வழங்க இடைக்கால தடை விதித்தும், இந்த விவகாரம் சம்பந்தமாக மதுரை மாவட்ட கலெக்டர் பதில் அளிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்தால் போதாது; தொடரும் போராட்டம்