ஒடிசா மாநிலம், நுவபாடா (Nuapada) மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த மீனாசிங் மாஜி என்பவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர் தனக்குப் பிறந்த முதல் குழந்தையைத் தத்துக் கொடுத்துவிட்டதால், தன்னுடைய பதவி பறிக்கப்படக் கூடாது என்று ஒரிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து சம்பந்தமான பொறுப்புகள் வகிக்க உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடவோ, பஞ்சாயத்து உறுப்பினராகவோ, பஞ்சாயத்து தலைவராகவோ தகுதி இல்லை என்ற சட்டம் இருக்கிறது. இந்த நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கவுல் மற்றும் ஜோசப் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், சட்டம் மிகத் தெளிவாக, “எந்தவொரு நபருக்கும், மூன்று குழந்தைகள் உயிரோடு பிறந்தால், மூன்றாவது குழந்தை பிறந்த உடனேயே அவர் தானாக தகுதி இழந்துவிடுவார். இந்தச் சட்டத்தின் நோக்கம் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தடுப்பது தானே தவிர, குழந்தைகள் பராமரிப்பை காரணம் காட்டி, தத்து கொடுத்ததன் அடிப்படையில் இங்கு செயல்பட முடியாது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

முன்னதாக ஒரிசா உயர்நீதிமன்றத்தில், “ ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பிறந்தால், அவர் தகுதி இழப்பாரா. இது ஜனநாயகத்துக்குப் புறம்பானது” என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த நீதிமன்றம், “இன்றைய வழக்கு இரட்டைக் குழந்தைகளை பற்றியதல்ல, அது மிகவும் அரிதாக நடப்பது. அப்படி ஒரு நிலை வரும் பட்சத்தில், அப்போது நீதிமன்றம் அது குறித்து முடிவெடுக்கும்” என்று பதிலளித்தது.