அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

கடந்த 4 ஆம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்த நிலையில், நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதுதொடர்பான தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆகஸ்ட் 26) உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாப்படி, அரசுப் பள்ளியில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தார்கள் என்றால் அவர்களது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்ட படிப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் கிராமப்புற மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாடத்திட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்.. சர்ச்சையில் டெல்லி பல்கலைக்கழகம்