கர்நாடகாவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி மாணவர்கள் நாடகம் நடத்திய விவகாரத்தில் பல்கலைக்கழக முதல்வர், நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு ஆகியோர் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜெயின் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் முதல் யூத் ஃபெஸ்டிவல் (Youth Festival) என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மேலாண்மை படிப்பு (Management studies) துறையைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் நகைச்சுவை நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில், சாதாரணமாக சென்ற அந்த நாடகம் சில நிமிடங்களுக்கு பிறகு ஜாதி வெறியை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியது. மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும், இடஒதுக்கீட்டையும் இழிவுபடுத்தும் வசனங்கள் அதில் இடம்பெற்றன. குறிப்பாக, பி.ஆர்.அம்பேத்கர் பெயரை ‘பீர்’ அம்பேத்கர் என்று உச்சரித்தும் வசனங்கள் பேசப்பட்டன.

இதனால் நாடகம் நடைபெற்று கொண்டிருந்தபோதே, பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்களும், பொதுமக்களும் அந்த நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். பிறகு நாடகம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

இதனையடுத்து, பார்வையாளர்களே ஒன்று திரண்டு இந்த நாடகத்துக்கு எதிராகவும், நாடகத்தை அரங்கேற்ற அனுமதியளித்த ஜெயின் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வு தொடர்பாக ஜெயின் பல்கலைக்கழகம் மீது மகாராஷ்டிரா, பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற மாவட்டங்களிலும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரு தெற்கு சமூக நலத்துறை உதவி இயக்குநர் சி.என்.மதுசூதன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பெங்களூரு தெற்கு, இணை ஆணையர் பி. கிருஷ்ணகாந்த் கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளோம். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக முதல்வர், யூத் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயின் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய நாடகக் காட்சிகள் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி வருகிறது. #BanJainUniversity என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், ஜெயின் பல்கலைக்கழகம் பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், நாடகம் போட்ட 6 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் இன்று அறிவித்துள்ளது.