கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்து, வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய தேதியை செப்டம்பர் 30 வரை இரண்டு மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதாவது 2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31 ஆம் தேதி மற்றும் நிறுவனங்களுக்கு அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

தற்போது, கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி வரையும், நிறுவனங்களுக்கு கடைசி தேதி நவம்பர் 30 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய நிலையில், மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. வருமான வரி செலுத்துபவர்கள், தங்களது தனிநபர் வருமான வரி கணக்கையும், வணிகம் தொடர்பான வருமான வரி கணக்கையும் இதில் தாக்கல் செய்து வருகிறார்கள்.

இதுமட்டுமின்றி, வருமான வரித்துறையிடம் சந்தேகம் எழுப்புவதற்கும், ரீபண்ட் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பவும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல், வருமான வரித்துறையினரும் வரி செலுத்துவோரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நோட்டீஸ் அனுப்பவும், மேல்முறையீடு, அபராதம், மதிப்பீடு போன்றவற்றில் இறுதி உத்தரவு பிறப்பிக்கவும் இந்த இணையதளத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இதற்குப் பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது. இந்த இணையதளம் ஜூன் 7ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இது, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1 முதல் 6 ஆம் தேதி வரை மூடப்படும். அந்த நாட்களில் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்களோ, வரித்துறை ஊழியர்களோ பயன்படுத்த முடியாது.

புதிய இணையதளத்துக்குப் பழகிக்கொள்ள வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் அளிக்கும்வகையில், அதிகாரிகள் தங்களது விசாரணை உள்ளிட்ட பணிகளை ஜூன் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்; 45லட்சம் பயனர்களின் தகவல்கள் திருட்டு