இந்தியா முழுவதும் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நெட் ஒர்க் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் கோவை மாவட்டம் வடவள்ளி பகுதிக்குள் மட்டும் நுழைய முடியவில்லை. இதற்குக் காரணம் ஆளும் அதிமுக அமைச்சர் வேலுமணியின் பினாமி என்று சொல்லிக் கொண்டிருக்கும் கோவை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகரின் தம்பி அன்பு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடவள்ளி பகுதியில் அன்புவின் மைத்துனர் சரவணன் என்பவர் துளசி ஃபைபர் நெட்வொர்க் நடத்தி வருகிறார். இப்பகுதியில் ஜியோ நெட்வொர்க்கை வரவிடாமல் தடுத்தால், தன்னுடைய நெட்வொர்க் பிரபலமாக பேசப்பட்டு, மேலும் மற்ற பகுதிகளில் விரிவாக்கத்திற்கும் உதவியாக இருக்கும் எனவும், மற்றொருபுறம் ஜியோ இணையதளத்திற்கு இடையூறு செய்தால் பேரம் பேசி பெரும் தொகை பெறலாம் எனவும் எண்ணி, ஜியோ இணையதள சேவையை தடுத்துள்ளார் அன்பு.
இதுகுறித்து ஜியோ அலுவலக ஊழியர் ஒருவர் கூறுகையில், ”இந்தியா முழுவதும் ஜியோ இணையதள சேவை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் ஜியோ நெட்டை பிரபலப்படுத்த கணபதி, ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் ஆகிய மூன்று ஏரியாக்களில் அலுவலகம் அமைத்துள்ளோம்.
ஒரு ஏரியாவிற்குள் இணையதள சேவை கொடுக்க வேண்டுமெனில், உள்ளூர் நபர்களை வைத்து முதலில் குழிதோண்டி ஃபைபர் வயரிங் பதித்து 30 அடி தூரத்திற்கு கம்பம் நட்டு முடிந்த பிறகுதான் வாடிக்கையாளர்களை இணைப்போம்.
அந்த வகையில் கோவை மாவட்டம் முழுவதும் ஜியோ நெட்டுக்கான அனுமதி பெற்றுள்ளோம். குறிப்பாக வடமதுரை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர், ஹட்கோ காலனி வரையிலும் ஜியோ நெட்வொர்க் கொண்டு போய்விட்டோம். ஆனால் இந்த மருதமலையிலிருந்துதான் செயல்படுத்த முடியாமல் உள்ளது. இதற்குக் காரணம் ஆளும் அதிமுக அரசியல்வாதிகளின் இடையூறுகள்.
மாவட்டட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கியும் எங்களால் முழுமையாக கேபிள் பதிக்கும் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதுகுறித்து காரணம் கேட்டால், எனக்கு 50% ஷேர் கொடுத்தாதான் போல் போட விடுவேன், இல்லனா நீ இத பண்ண முடியாது. யாருகிட்ட வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணிக்கோ என்று அதிமுக பிரமுகர்கள் மிரட்டுகிறார்கள்.
கிட்டத்தட்ட அனுமதி வாங்கி ஒன்றரை வருடம் முடிந்தும், வடவள்ளியில் மொத்தம் உள்ள 16 பவுண்டரிகள்ல 1 பவுண்டரிதான் ரெடியா இருக்கு. இந்த 16 பவுண்டரிகளுக்கும் சுமார் 30 கோடி வரை செலவாகும். அதில் பாதியை எதிர்பார்த்து இடையூறு செய்கின்றனர்.
இந்த பிரச்சனைகள் குறித்து மும்பையில் உள்ள எங்களது தலைமை அலுவலக நிர்வாகத்திடம் கூறியபிறகு, காரணம் அறிந்து மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்பிறகாவது பணிகள் தொடர்ந்து நடைபெறுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் ஜியோ ஊழியர்.
பாஜக மோடியின் செல்வாக்கு மிக்க அம்பானியின் ஜியோ இணையதள சேவையையே தடுத்து நிறுத்தி, தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளனர் என அதிமுக அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க: 2ஆம் இடத்தைப் பிடித்த தமிழகம்… சமூக பரவல் இல்லையெனக் கூறும் எடப்பாடி…