முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உட்பட இதுவரை 9 எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் சமூக பரவல் இல்லையெனக் கூறும் ஆளும் அதிமுக அரசை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்து, இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கொரோனாவின் கோர பிடியில் சிக்கி பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சமீப நாட்களாக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க: 2021.க்கு முன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லையா..

ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தொடர்ந்து திமுக, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகதில் இதுவரை 4 திமுக எம்.எல்.ஏக்களுக்கும், 5 அதிமுக எம்.எல்.ஏக்களும் கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது வளர்மதிக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.