புதுக்கோட்டை அருகே மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது, தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சிறுவன் 3 நாட்கள் உயிருக்கு போராடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி சாலையில் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தில் மத்திய, மாநில காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவர்.
அங்கு 30.12.2021 காலை மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) காவலர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் நார்த்தாமலை கிராமத்தில் உள்ள வீட்டில் சாப்பாட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி (வயது 11) தலையில் தோட்டா பாய்ந்தது.
இதனால் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் நிலைமை கவலைக்கிடமானது.
இதனையடுத்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, 4 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இருப்பினும் சிறுவன் புகழேந்தி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் பற்றி சிறுவனின் தந்தை கலைச்செல்வன் கூறுகையில், “மகன் தனது பாட்டியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் திடீர் என சத்தம் கேட்டதாகவும் பிறகு கவனித்தபோது மகனின் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததாகவும் தெரிய வந்தது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது திடீர் திருப்பமாக மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் ஒரு பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதேவேளையில், மற்றொரு பகுதியில் அகில இந்திய அளவில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக மத்திய மண்டல காவல் துறையைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதில் பங்கேற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி, சிகிச்சை பலனின்றி இன்று (3.1.2022) மாலை உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.