எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ரஃபேல் ஊழல் குறித்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகம் நேற்று சென்னையில் இந்து என்.ராம் அவர்களால் வெளியிட இருந்த நிலையில் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் புத்தகத்தை பறிமுதல் செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களுக்கு தடை விதிக்கும் தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி குறித்த திரைப்படமான பி.எம்.நரேந்திரமோடி திரைப்படத்திற்கு தடை விதிக்கவில்லை. அதேபோல் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் நமோ டிவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம் என தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்த டுவிட்டிற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஆளும்கட்சியின் கூட்டணியாக செயல்படக்கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் முடிவு சர்ச்சைக்குள்ளனத்தை அடுத்து, நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, பறிமுதல் செய்த புத்தகங்கள் தற்போது திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து, திட்டமிட்டபடி மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது என பதிப்பகத்தார் தகவல் அளித்துள்ளனர். முன்னதாக இப்புத்தகம் ஆன்லைனில் 1மில்லியனை தாண்டி பதிவிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.