விழுப்புரம்  மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. 
 
இங்கு ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகள் கலந்துகொள்ளும் சித்திரைத் திருவிழா நடைபெறும். உலக அளவில் புகழ்பெற்ற இந்த விழாவில் கேரளம், கர்நாடகம், ஆந்திரா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும்
 
ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்று தரிசனம் செய்வர்.இன்று புதன்கிழமை இரவு சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
 
5-ம் தேதி பீஷ்மர் பிறப்பு,
6-ம் தேதி தர்மர் பிறப்பு,
7-ம் தேதி பாஞ்சாலி பிறப்பு,
8-ம் தேதி பகாசுரன் வதம்,
9-ம் தேதி பாஞ்சாலி திருமணம்,
10- ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு,
11-ம் தேதி ராஜசூய யாகம்,
12-ம் தேதி தெய்வநாயகம் தோப்பில் வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சியும்,
13-ம் தேதி கிருஷ்ணன் தூது மற்றும் இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும்
14- ம் தேதி காலையில் கூத்தாண்டவருக்கு பாலாலயம் நிகழ்ச்சியும்
15-ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும்  நடைபெறுகிறது.
 
பின்னர்  ஏப்ரல் 16-ம் தேதி சுவாமிக்கு கண் திறத்தலும் நடைபெறும். அன்று அனைத்து திருநங்கைகளும் ஒரே  இடத்தில் கூடுவர்.
 
பின்னர், திருநங்கைகள் தங்கம் மற்றும் வைர நகைகள், பட்டுப்புடவை அணிந்து வந்து கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். புது மணப்பெண்கள் போல் காட்சி தரும் திருநங்கைகள் அன்று இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். 
 
அரவானுக்கு 108 மற்றும் 1008 சூறைத் தேங்காய்களை உடைப்பர். 
 
இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அப்போது பல்வேறு தானியங்களில் தயாரிக்கப்பட்ட கூழ் மற்றும் கஞ்சி அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.