பேஸ்புக்கில் தரப்படும் அரசியல் பேஸ்புக்கில் மதிப்பு 8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. விளம்பரம் தருவதில் பாரதிய ஜனதாவினர் முன்னனியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் பிரச்சாரங்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர பிரிவானது, அரசியல் விளம்பரங்கள் குறித்து விரிவான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் 16 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் மொத்தமாக ரூ.6.88 கோடி செலவில் 34,048 விளம்பரங்களை முகநூலில் வெளியிட்டுள்ளன. அதுவே மார்ச் 23ம் தேதிக்குள்ளாக 42,514 விளம்பரங்களாக அதிகரித்துள்ளது. அவற்றுக்கு செய்யப்பட்ட செலவும் ரூ.8.38 கோடியாக உயர்ந்துள்ளது.
 
இதன் மூலம் ஒரே வாரத்தில் 7,400 அரசியல் தொடர்பான விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக, பாரத் கே மன் கீ பாத் என்ற முகநூல் பக்கத்தில் ரூ.2.23 கோடிக்கும் அதிகமான செலவில் சுமார் 3,700 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
பாஜக முகநூல் பக்கத்தில் ரு.7 லட்சம் செலவில் சுமார் 600 விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல், மை ஃபர்ஸ் வோட் ஃபார் மோடி, நேஷன் வித் நமோ போன்ற முகநூல் பக்கங்களிலும் விளம்பரங்களுக்காக அதிகம் செலவிடப்பட்டுள்ளன.
 
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் முகநூல் பக்கத்தில் ரூ.2.12 லட்சம் செலவில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சி சார்பில் 410 விளம்பரங்கள் தரப்பட்டிருப்பதாகவும், இதன் மதிப்பு 5 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்சிகளை தவிர அவற்றின் ஆதரவாளர்கள் சார்பிலும் ஏராளமான விளம்பரங்கள் தரப்பட்டிருப்பதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.