பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் விடுவிக்கக்கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சுகந்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் நிர்மலாவை நாளை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா தேவியை சிறையில் சந்தித்து சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் மதுரை காமராஜர் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதாக ஏப்ரல் 23ம் தேதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.
இதேபோல் முருகன் மற்றும் கருப்பசாமியும் தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த வழக்கில் பல்வேறு முக்கிய நபர்கள் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் கூறி வந்தனர்.
இதனிடையே தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி நிர்மலா தேவி, கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் பலமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதையடுத்து கருப்பசாமி மற்றும் முருகன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்., 14ம் தேதி இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நிர்மலா தேவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிர்மலா தேவி தொடர்பான வழக்குகளும், அவர் ஜாமீன் வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிரபல புள்ளி சம்பந்தப்பட்டு இருப்பதால் நிர்மலா தேவி விஷயத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது ..