தேமுதிகவினர் தங்களை காப்பாற்றி கொள்ள தற்போது மாற்றி பேசுவதாக துரைமுருகன் கூறியுள்ளார். நேற்று தம்மை சந்திக்க வந்த தேமுதிக நிர்வாகிகளை முன்பின் பார்த்ததில்லை. தம்மை சந்திக்க வந்த இளங்கோவன் மற்றும் முருகேசனை தமக்கு முன்பின் தெரியாது என்றும் அதனால் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு எதுவும் இல்லையென்றும் கூறினார்.
 
நீங்கள் வந்திருப்பது உங்கள் கட்சி தலைவருக்கு தெரியுமா என வினவினேன். அதற்கு அவர்கள் இருவரும் தங்கள் கட்சி தலைவர் விஜயகாந்த் அனுப்பியே உங்களை சந்திக்க வந்திருக்கிறோம் என கூறினர்.
 
அது போல நேற்று சுதீஷ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அது உண்மை தான். தற்போது அவர்கள் மாற்றி மாற்றி பேசுவதை பார்த்தால் தேமுதிக-வை பார்த்து பரிதாப படுவதை தவிர வேறுவழியில்லை என்றார்.
 
அவர்கள் எதிர்பார்த்தபடி கூட்டணி அமையாததாலும், தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததாலும் அவர்கள் மிகவும் நொந்து போயுள்ளனர்.
 
எனவே என்ன செய்கிறோம், பேசுகிறோம் என தெரியாமல் இப்படி மாற்றி மாற்றி பேசும் பரிதாப நிலையில் உள்ளனர் என கூறியுள்ளார். நொந்து போயுள்ள தேமுதிக-வினரை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை என்றார். அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்காக என்னை பற்றி தற்போது பேசுகிறார்கள் என துரைமுருகன் கூறினார்.
 
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்று முன்தினம் முடிவடைந்தது.இந்த தகவலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
 
இதற்கிடையே, தேமுதிக சார்பில் அதிமுக, பா.ஜ.க நிர்வாகிகளுடன் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது. கூட்டணி முடிந்து நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், திடீரென்று பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. முன்னதாக நேற்று பிற்பகலில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
 
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேமுதிக நிர்வாகிகள் மோகன் ராஜ், இளங்கோவன், முருகேசன் ஆகியோர் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னையில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம் சென்றனர்.
 
அப்போது அவர்கள் துரைமுருகனை சந்தித்து திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற விரும்புவதாக தெரிவித்தனர்.
 
சந்திப்பு முடிந்த பின்னர் துரைமுருகன் கூறியது:தேமுதிக நிர்வாகிகள் என்னை சந்தித்து திமுக கூட்டணிக்கு வர விரும்புவதாக தெரிவித்தார்கள். இதுதொடர்பாக தேமுதிக நிர்வாகி சுதீஷ் என்னிடம் தொலைபேசி மூலம் பேசினார். ஆனால் ஏற்கனவே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து விட்ட தால் கடைசி நேரம் அணுகிய தேமுதிகவுக்கு தருவதற்கு சீட் இல்லை. தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
 
ஆனால் இதற்கு இன்றைய செய்தியாளர் சந்திப்பில் திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகவே சந்தித்ததாக தேமுதிக-வை சேர்ந்த மாவட்ட செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார். அனகை முருகேசனும் தாமும் சென்று துரைமுருகனை சந்தித்ததாக இளங்கோவன் கூறியுள்ளார். துரைமுருகனுடன் அரசியல் ஏதும் பேசவில்லை என இளங்கோவன் கூறியுள்ளார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், தாம் 10 நாட்களுக்கு முன் துரைமுருகனுடன் பேசியதாகவும், நேற்று பேசவில்லை என்றும் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
 
ஆனால் ஊடகங்களில் தாம் அளித்த பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தாம் நேற்று துரைமுருகனிடம் பேசியதாக கருதப்பட்டுவிட்டது என விளக்கமளித்துள்ளார். ஒரே மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகனும், நானும் பலமுறை சந்தித்து பேசியுள்ளோம்
 
அது போல ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் பேசக்கூட்டாதா? துரைமுருகனுடனான நேற்றைய தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை முருகேசன் மற்றும் இளங்கோவன் துரைமுருகனை சந்தித்தது அவர்களது சொந்த காரணங்களுக்காக என்றார்.
 
மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 நாளில் அறிவிப்போம். பாஜக – அதிமுக-வுடன் தொடர்ந்து பேச்சு நடப்பதாகவும் ஓரிரு நாளில் தொகுதி குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
 
முதலில் தாங்கள் பாரதிய ஜனதாவுடன் தான் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பேசியதாகவும், அப்போது அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்க உள்ளதாக அவர்கள் தரப்பு கூறியதாக சுதீஷ் குறிப்பிட்டார்.
 
இதனையடுத்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அதிமுக-வுடன் சிறிது யோசனைக்கு பிறகே தேமுதிக தாமதமாக துவக்கியதாக கூறினார் சுதீஷ். பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது எங்களுடைய தொகுதி பங்கீட்டை உறுதி செய்திருக்கலாம் என்பது எங்கள் வருத்தம் என சுதீஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.