பாஜகவின் கலாச்சார பிரிவு செயலாளராக உள்ள காயத்ரி ரகுராம், தான் இன்னும் பாஜக கட்சியில் நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.
நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர். தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்களின் அதிருப்தியை அதிகளவில் பெற்றார்.
தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய சர்ச்சையில் சிக்கினார். அதற்கு, அப்போது ‘தான் இருமல் மருந்து குடித்து விட்டு வண்டி ஓட்டியதாகவும், அதில் இருந்த ஆல்கஹாலே வாகனச் சோதனையில் தெரிய வந்தது’ என்றும் விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், காயத்ரி ரகுராம் பாஜக காட்சியில் உறுப்பினர் இல்லை என்றார். இதனால் அவருக்கும் காயத்ரிக்கும் இடையே மோதல் உண்டானது.
இந்நிலையில், தான் இன்னமும் பாஜக கட்சியிலேயே தொடர்வதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். அப்பதிவில், “நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் சிலருக்கு. தாங்களாகவே யூகித்துக் கொண்டு தவறான செய்திகளைப் பரப்புவார்கள். அதனால் தான் மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பார்கள்.
நான் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறேன். இதைப் பற்றி யார் விவாதிக்க விரும்புகிறார்களோ, அவர்கள் விவாதிக்கட்டும். ஆனால், நான் தமிழிசை மேடத்தின் ஆதரவாளர் இல்லை. சிம்பிள்” என தெரிவித்துள்ளார்.
இது அஜித் சர்ச்சையில் தமிழிசை சௌந்தரராஜனை குறிப்பிட்டு காயத்ரி கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். முன்னதாக தமிழிசையை தூக்கினால் தான் பாஜக உருப்புடும் என்று காயத்ரி ரகுராம் கூறியது குறிப்பிடத்தக்கது.