வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வடசென்னை” படத்தின் இசை இன்று வெளியாகியுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளிவரவுள்ள படம் வட சென்னை. இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கணி, கிஷோர், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தற்போது பாடல்களை மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளர்களும் படாதபாடு படுகின்றனர். சிங்கிள் டிராக் வெளியிடுவது, பாடலுக்கு டீசர் விடுவது, பாடலுக்கு புரமோ பாடல் வெளியிடுவது என புதுப்புது யுத்கிகளைக் கையாண்டு வெற்றிபெற முயற்சிக்கின்றனர்.

ஆனால் இவற்றையெல்லாம் உடைக்கும் வகையில் படத்திலுள்ள எல்லா படல்களையுமே ஒரே நாளில் வெளியிடுவோம் என வடசென்னை படக்குழு அறிவித்தது. பாடல் வெளியீட்டில் புதிதாக ஒரு ட்ரெண்டை மற்றவர்கள் பின்பற்றும்போது இப்படி மொத்தமாக வெளியிடுவது பேசப்படும் என்பதைத் தாண்டி சந்தோஷ் நாராயணன் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும் காரணமாக இருக்காலம் எனக் கூறப்படுகிறது.

படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் உள்ளன. அதில் கொய்ந்தம்மாள் என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளார். சந்தனத்த… என்ற பாடல் மற்றும் மாடியில நிக்குற மான் குட்டி… பாடலை கானா பாலா எழுதி பாடியுள்ளார். மேலும் ஸ்ரீராம் பார்த்தசாரதி, சந்தோஷ் நாராயணன், சிதை ரேவ் ரவி, தோலக் ஜெகன், அறிவு ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர். இப்படத்தில் வரும் சந்தனத்த… பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

அடுத்தமாதம் 17ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.