‘எனக்கு கட் அவுட் வையுங்கள், அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யுங்கள்’ என கூறிய நடிகர் சிம்பு மீது தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் சர்ச்சையில் முக்கியமானவராக இருப்பவர் சிம்பு. தற்போது, சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அண்மையில், எனக்கு கட் அவுட் வேண்டாம், பால் அபிஷேகமும் வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கடுத்து, மற்றொரு வீடியோவில், ‘நான் இதற்கு முன்பு கட் அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் என்றேன். அதற்கு சிலர் எனக்கு ரசிகர்களே கிடையாது என்றும் வெறும் 2,3 பேர் தான், குறைந்த ரசிகர்கள் கொண்ட சிம்பு ஏன் இதெல்லாம் கூறுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.

எனவே, இதற்கு முன்பு பால் அபிஷேகம் குறித்து பேசியதை நான் திருத்திக் கொள்கிறேன். இனி எனக்கு பேனர், கட் அவுட் எல்லாம் வையுங்கள். பால் அபிஷேகம் செய்யுங்கள். பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம். அண்டா அண்டாவா பாலை கொண்டு வந்து உஊற்றுங்கள். இதுவே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’ என பேசியுள்ளார்.

இதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து, சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது வழக்கு தொடருவோம் என்று தெரிவித்திருந்தனர். இதற்கு சிம்பு தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், சிம்பு மீது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனர் பொன்னுசாமி கூறுகையில், இதற்கு முன்னதாக விஸ்வாசம் மற்றும் பேட்ட படம் வெளியான போது ரசிகர்கள் நடிகருக்கு பால் அபிஷேகம் செய்த போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில், சிம்பு, தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவா பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று கூறுவது தவறானது. இது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது.

இளைஞர்களை சரியான வழியில் வழிநடத்துவதே நமது கடமை. எனவே, காவல் துறையிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால், சிம்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.