கொடநாடு கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் மாயமானதாக மேத்யூ கூறியுள்ளார்.
கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த இருவரும் மாயமானதாக அவர் கூறினார். சயனை போனில் தொடர்புகொள்ள முடிவில்லை என்றும் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து இருக்கலாம் எனவும் மேத்யூ தெரிவித்துள்ளார்.
மேலும் சயன், மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய போலீசார் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தமக்கு தகவல் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதாகி இருவரும் ஜாமினில் உள்ளனர். இந்நிலையில் நீதிபதி உத்தரவுப்படி எழும்பூர் கோர்ட்டில் ஆஜராவதற்காக சயனும், மனோஜும் கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்துள்ளனர்.
அப்போது இருவரும் மாயமானதாக தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆவணப்படத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் 5 தொடர் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக சரமாரி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து தனிப்படை போலீசார் சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்ய டெல்லி விரைந்தது. டெல்லியில் கைது செய்யப்பட்ட இருவரையும் தமிழகம் அழைத்து வந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். ஆனால் ஆதாரம் எதும் இலலாத காரணத்தினால் அவர்களை ரிமாண்ட் செய்ய் நீதிபதி மறுப்பு தெரிவித்தார்
இதனையடுத்து அவர்கள் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கோர்ட்டில் ஆஜராவதற்காக கேரளாவிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த சயன், மனோஜ் திடீரென மாயமானதாக மேத்யூ கூறியுள்ளார்.