நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஷால் உறுதி செய்துள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன். சண்டைக் கோழி, திமிரு, மலைக்கோட்டை ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
நடிகர் விஷால், கோலிவுட் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்யவுள்ளார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்கிற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரின் தந்தை ஜி.கே. ரெட்டி தெரிவித்தார். இது காதல் திருமணம் என்று விஷால் கூறினார். மேலும் தனது திருமண விபரங்களை தானே வெளியிடுவதாக கூறியுள்ளார்.
தற்போது, விஷாலுக்கும், அனிஷாவுக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கும் புகைப்படங்களை அனிஷா ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது பதிவில், ”விரைவில் நான் புதிய பயணத்தை துவக்க உள்ளேன். வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை அனிஷா தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புலு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஷாலும் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு, “ஆமாம். மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி. பெயர் அனிஷா அல்லா. ஆமாம் அவள் சம்மதம் தெரிவித்து விட்டார். இப்போது அது உறுதியாகிவிட்டது. என் வாழ்க்கையின் மிகப்பெரிய அடுத்த கட்டம். விரைவில் தேதியை அறிவிக்கிறேன்” என விஷால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் பிரமாண்ட முறையில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடத்தில் இவர்களது திருமணம் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.