அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில், தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் ஆனால் முடிவை அறிவிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மார்ச் 27 ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக இன்று 919.03.2023) சிறப்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அதில், நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என அறிவித்திருந்தனர். இந்த சூழலில் பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர்.
கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னும் கலைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பொதுச் செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதாகி விடும் என்று வாதிட்டனர்.
இதனையடுத்து எடப்பாடி தரப்பில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. கட்சிக்கு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டால் தான் கட்சியின் பிரச்சினைகளை கையாள முடியும். ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடர எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என வாதிட்டனர்.
தொடர்ந்து ஜூலை 11, 2022 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன.. என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும், வழக்குகளுக்காக காத்திருக்க முடியாது. மக்களவை தேர்தல் நெருங்குகிறது என்று எடப்பாடி தரப்பு பதிலளித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். ஒரேயொரு வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால் இத்தகைய பரிந்துரையை அளிக்கிறோம் . ஏப்ரல் 11 ஆம் ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22 ஆம் தேதி விசாரிக்கப்பட்டு, மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்” என்று உத்தரவிட்டுள்ளார்.