விஜய் தேவரகொண்டா- ஷாலினி பாண்டே நடிப்பில் 2017ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “அர்ஜுன் ரெட்டி”. ரசிகா்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மிகுந்த லாபத்தை ஈட்டிய இப்படத்தை தெலுங்கில் சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் உரிமையை பல மொழிகளிலும் வாங்கியுள்ளனர்.
இப்படம் “வர்மா” என்ற பெயரில் தமிழில் ரீமேக்காகியுள்ளது. பாலா இயக்கியுள்ள வர்மா படத்தில் ஹீரோவாக விக்ரம் மகன் துருவ் ஹீரோயினியாக நடிகை மேகா சௌத்ரி அறிமுகமாகிறார்கள்.
மேலும் படத்தில் ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார். ரதன் இசையமைத்துள்ளார். வர்மா படத்தை E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23ம் தேதி ‘வர்மா’ படத்தின் பா்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனால் ரசிகர்களிடையே இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் இந்தியிலும் ரீமேக்காகிறது. இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக சாஹித் கபூர் நடிக்கிறார். இந்தியில் இந்தப் படத்தை ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை தெலுங்கில் இயக்கிய இயக்குநர் சந்தீப் வங்காவே இயக்குகிறார். இப்படத்தை சினி1 ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் சந்தீப் வங்கா கூறுகையில், “இந்தியில் ரீமேக் செய்யணும் என்று எண்ணிய போதே ‘கபிர் சிங்’ என்ற பெயர்தான் எங்கள் மனதில் தோன்றியது. தற்போது அதையே டைட்டிலாக வைத்துள்ளோம். ‘கபிர் சிங்’கும், அர்ஜூன் ரெட்டி போன்ற துடிப்பான கதாப்பாத்திரமாக இருக்கும்” என்றார்.