ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது; இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நோபல் பரிசுபெற்ற மலாலா யூசுஃப்சாய் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தற்போது, ஹிஜாப் vs காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. கர்நாடகா அரசு சீருடை அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் அந்த உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலாலா வெளியிட்டுள்ள பதிவில், “படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ – தங்களுடைய ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் பிறந்த மலாலா யூசுஃப்சாய் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான கல்வி, உரிமைக்காக குரல் கொடுத்தவர். இதனால் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது 11 வயதில் தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்தார். இவருக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து மலாலா கருத்து கூறிய விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை குறைந்துள்ளதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.