திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி உடுமலை பஸ் நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சென்ற கவுசல்யா படுகாயம் அடைந்தார். இந்த ஆணவ படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கவுசல்யா தந்தை சின்னசாமி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கவுசல்யா தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சங்கர் படுகொலைக்கு பின்னர் கவுசல்யா தனது கணவர் பெயரில் சமூக நீதி அறக்கட்டளை நடத்தி வந்தார். சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக போராடி வந்தார். டிசம்பர் 1 ஆம் தேதி நந்தீஸ்-சுவாதி படுகொலைக்கு எதிராக கண்ட கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில் கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார். இருவரும் பறை இசை முழங்க சுயமரியாதை முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இவரின் திருமணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சத்யராஜ் கவுசல்யா- சக்தி தமபதிக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “சாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண், பெரியாரின் பேத்தி தோழர் கவுசல்யாவுக்கும், பறை அடித்து பகுத்தறிவைப் பரப்பும் பாசமுள்ள தோழன் சக்திக்கும் என்னுடைய மணமார்ந்த வாழ்த்துகள்.

சலிப்பும், ஓய்வும், ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலைக்குச் சமம் – தந்தை பெரியார். கற்பி ஒன்று சேர் புரட்சி செய் – அண்ணல் அம்பேத்கர், பயத்தை விடு இல்லையேல் லட்சியத்தை விடு – பிரபாகரன் இந்த மூன்று போராளிகளின் வீரத்தை லட்சியத்தை மனதில் ஏற்றுச் செயல்படும் தோழர் கவுசல்யாவுக்கும், சக்திக்கும் என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.