சேவை வரி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷாலில் விஷால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 1கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சுமார் 10 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும் விஷால் நேரில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை, இதன்காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்று சரக்கு மற்றும் சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, “சேவை வரி அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் வேண்டும் என்றே ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது.

வழக்கு தொடர்ந்த பிறகே சேவை வரி தொடர்பான விவரங்களை விஷால் அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரித்துறையில் விஷால் ஆஜராகாதது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுவதாகவும், அதனால் நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.