வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.16 கோடி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று (15.12.2021) அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய 5வது அமைச்சர் தங்கமணி ஆவார்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையானது நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்களிலும், சென்னையில் 14 இடங்களிலும்,

ஈரோட்டில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், கோவை மற்றும் கரூரில் தலா 2 இடங்களிலும், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர், பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் என 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 69 இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில் ரூ.2.37 கோடி ரொக்கம், 1.130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம், சான்று பொருள்களான கைப்பேசிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது பதியப்பட்ட 9 பக்க எஃப்.ஐ.ஆரில், “2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது சொத்து விவரங்களையும், மனைவி மற்றும் மகன் பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரங்கள் வடிவில் தாக்கல் செய்தார்.

அப்போது, அவரது மகன் தரணிதரன் முருகன் எர்த் மூவர் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விசாரணையில், அந்த நிறுவனமானம் ஆவணங்களில் மட்டுமே இருந்ததாகவும், நிஜத்தில் அப்படியொரு நிறுவனம் செயல்பாட்டில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

அமைச்சரின் சட்டவிரோத பணத்தின் ஆதாரத்தை மறைக்கவே இந்நிறுவனம் போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அதே போல், தங்கமணியின் மனைவி சாந்தி, ஹவுஸ் வைப் என்றும், எவ்வித தொழிலும் ஈடுபடவில்லை. ஆனால், சட்டவிரோத பணத்தை மறைத்திட அவர் தொழில் நடத்துவதாகவும், அதற்கு வருவான வரி கட்டுவது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலக்கட்டத்தில் தங்கமணி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரின் பெயரில் மொத்தமாக 7,45,80,301 மதிப்பிலான சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த காலக்கட்டத்தில் அவரது சேமிப்பு பணத்தை மதிப்பிடுகையில் 2,60,08,282 ரூபாய் தான் வந்துள்ளது.

அதன்படி, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 4,85,72,019 ரூபாய்க்கு சொத்துகளை வாங்கிகுவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தங்கமணியின் மருமகன் எஸ்.தினேஷ் குமார், MANTARO நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர்களில் ஒருவராகவும் (நியூஸ் ஜே சேனல்), மெட்ராஸ் ரோட் லைன்ஸின் பங்குதாரர்களில் ஒருவரான ஜெயஸ்ரீ செராமிக்ஸ், ஸ்ரீ ப்ளை அண்ட் வெனீர்ஸ், ஏஜிஎஸ் டிரான்ஸ்மோவர், ஸ்மார்ட் டிரேட் லிங்க்ஸ், ஸ்மார்ட் டெக்., ஸ்ரீ ப்ளைவுட்ஸ் மற்றும் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் நிறுவனங்களின் பாட்னராகவும் உள்ளார்.

அவரது தந்தை சிவசுப்ரமணியன், MRL லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பிற சொத்துக்கள் பெயரில் 100க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. தினேஷ் குமார் மனைவி டி.லதாஸ்ரீ, ஜெய ஸ்ரீ நிறுவனத்தின் உரிமையாளராகவும், ஜெயஸ்ரீ’ஸ் பில்ட் புரோ நிறுவனத்தின் பாட்னராகவும் உள்ளார்.

இதுமட்டுமின்றி, தங்கமணி மற்றும் அவரது மகனும், தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சம்பாதித்த பணத்தில் பல சொத்துகளை வாங்கியிருக்காலம் சந்தேகிக்கப்படுகின்றனர். முறைகேடாக சம்பாதித்த பணத்தில் பெருமளவை கிரிப்டோகரண்சியில் முதலீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கிகுவித்ததன் காரணமாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரனிசந்திரன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை. பாசறையில் பயின்ற நாங்களும், எங்களின் கழக உடன் பிறப்புகளும், திமுக அரசின் சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சி விட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.