மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 90வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகன் பாரத ரத்னா அப்துல் கலாமின் 90வது பிறந்த தினம் இன்று (15.10..2021) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடம் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அப்துல் கலாம் நினைவிடத்தில், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், நடிகர் தாமு, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அவரது தேசிய நினைவகத்தைப் பார்வையிட்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம்” என புகழஞ்சலி செலுத்தினர். மேலும் அப்துல் கலாமுடன் இருக்கும் புகைப்படங்களையும் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தில் 1931 அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்த அப்துல் கலாம், ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தாலும் தன் அயராத உழைப்பினால் பலவற்றை சாதித்து, உலக அளவில் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்லாது மிகச்சிறந்த பேராசிரியர், விஞ்ஞானி என உயர்ந்தார்.

அக்னி நாயகனான அவரின் திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற கலாம் தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார்.

மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி அப்துல் காலம் மறைந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு, 2017 ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.