காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில், கடந்த 4 தினங்களில் 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் சமீப காலமாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். 5 தினங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காஷ்மீர் பண்டிட் உள்பட 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதனைத்தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படை வீரர்களும், காவல்
துறையினரும் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் போது கடந்த 10 ஆம் தேதி இரவு பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில், ராணுவத்தின் ஜே.சி.ஓ. அதிகாரி மற்றும் 4 வீரர்கள் என 5 வீரர்கள் பலியாகினர்.

இதற்கு பதிலடியாக 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து மேலும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

5 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஜம்மு- பூஞ்ச்- ரஜோரி பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நெடுஞ்சாலையை மூடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பூஞ்ச் – ரஜோரி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அங்குள்ள மென்தார் சப்- டிவி‌ஷனில் இருக்கும் நார்காஸ் வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றுள்ளது.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜே.சி.ஓ. அதிகாரி ஒருவர் மற்றும் ராணுவ வீரர் ஒருவரும் காயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே இருவரும் பலியானார்கள். கடந்த 4 தினங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே 5 பாதுகாப்புப் படை வீரர்களை கொன்ற அதே பயங்கரவாதிகள் தான் தற்போது ஜே.சி.ஓ. மற்றும் ஒரு வீரரின் பலிக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.