லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா 11 மணிநேர விசாரணைக்குப்பின் நேற்று (9.10.2021) இரவு கைது செய்யப்பட்டு, 2 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது, பாஜக ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ரா சென்ற கார் விவசாயிகள் மீது ஏறியதால் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஒன்றிய அமைச்சரின் மகன் ஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், லக்கிம்பூர் கெரி வழக்கில் ஏன் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியது. மேலும் கொடூரமான கொலை வழக்கை இப்படித் தான் கையாள்வதா? உத்தரப் பிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டாலும் நடவடிக்கை எடுங்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டம் நடவடிக்கை எடுக்கும். மேலும் இந்த வழக்கில் எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று உ.பி. அரசிற்கு உத்தரவிட்டது.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆஷிஸ் மிஸ்ரா, 9.10.2021 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து உடனடியாக ஆஜராகும்படி ஆஷிஸ் மிஸ்ரா வீட்டில் 2 சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால் ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை. அவர் நேபாளத்திற்கு தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆசிஷ் மிஸ்ரா நேற்று (9.10.2021) காலை 11 மணிக்கு சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் காவல் அதிகாரி டிஐஜி உபேந்திர அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினார். ஏறக்குறைய 11 மணிநேரம் லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால், காவல்துறையினர் விசாரணைக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து, ஆஷிஸ் மிஸ்ராவை காவல்துறையினர் நேற்று இரவு 11 மணி அளவில் கைது செய்தனர். அவரை நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு எடுக்க காவல்துறையினர் கோரினர்.

ஆனால், திங்கட்கிழமை வரை ஆஷிஸ் மிஸ்ரா நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் டிஐஜி உபேந்திர அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால், அவர் எதற்கும் ஒத்துழைப்பு தரவில்லை” எனத் தெரிவித்தார்.

ஆஷிஸ் மிஸ்ரா விசாரணைக்கு வருவதையடுத்து, லக்கிம்பூர் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.