நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டைத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளநிலையில், சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் போது நடிகர் சிம்பு இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும், அந்த திரைப்படத்தின் நஷ்டத்திற்கு சிம்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
மேலும் சிம்புவால் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் நடிகர் சிம்புவிற்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது.
இந்நிலையில் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்திற்கு பெப்சி ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதுகுறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நடிகர் சிம்பு தரப்பில் இருந்தும் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்தும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, சிம்புவிற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.
இதனையடுத்து சிம்பு நடித்துவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து எந்த முடிவையும் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு