ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஒன்றிய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதி அமலில் இருந்தது. இதனையடுத்து, அந்த சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று ஒன்றிய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011 ஆம் ஆண்டு இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து 7 ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.
இதற்காகத் தனியாகச் சான்றிதழ் பெற வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் உத்தரவு