மதுரை தோப்பூரில் 3 ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கட்டுமான பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்கின்றனர். இந்த சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் குறைந்த செலவில் சிகிச்சை பெற்று பயனடைந்து இருப்பார்கள்.
ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேல் ஆகியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு ஆகஸ்ட் 17 அளித்த தீர்ப்பில், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டபோது, பிற மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. இந்த உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து 3 ஆண்டுக்குள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது” எனக் கூறி நீதிபதிகள் வழக்கை வைத்து உத்தரவிட்டனர்.
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி