ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உள்ளிட்ட 5,000 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களை சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். எனினும் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில் ட்விட்டர் விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் ரோஹன் குப்தா கூறுகையில், “மக்களின் குரலாக காங்கிரஸ் கட்சி எழுவதில் எந்த சேதத்தையும் இது ஏற்படுத்திவிடாது. ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு ஏற்ப ட்விட்டர் நிறுவனம் செயல்படுகிறது.
அதனால் தான் நாடு முழுவதும் 5 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதால் முடக்கிவிட்டோம் என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்கிறது. விதிமுறை மீறல் இருப்பதாகக் கூறினால், ஆகஸ்ட் 2 முதல் 5 ஆம் தேதிவரை பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் ட்விட்டர் கணக்கில், சிறுமியின் பெற்றோர் புகைப்படம் எவ்வாறு இருந்தது?
கடந்த 4 ஆம் தேதி சிறுமியின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார். அவர்களின் குரலாகப் பேசினார். அதற்கு ட்விட்டர் நிறுவனம் உடனடியாக ராகுல் காந்தியின் கணக்கை முடக்கி, அவரின் ட்விட்டர் பதிவை நீக்கியது. இது இரட்டை நிலைப்பாடு. அழுத்தத்தின் பிடியில், நெருக்கடியில் ட்விட்டர் நிறுவனம் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு