இந்தியாவில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது.

மத்திய அர கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 72 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டப் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாகக் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின், விவசாயிகள் போராடும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. காசிப்பூர் உள்ளிட்ட டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்புகளும், முள்வேலிகளும் போடப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதன் எல்லைகளில் 50,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுவதால், போராட்டம் நடைபெறும் இடங்களில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

டெல்லி எல்லையில் போராடும் இடங்களில் பல்வேறு பகுதிகளிலும் இணையச் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், தலைநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் வன்முறை ஏற்படுவதைத் தவிர்க்க, சில இடங்களில் மட்டுமே தற்காலிகமாக இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் இணைத் தலைவர் பிராட் ஷெர்மன், “இந்தியாவில் ஜனநாயகத்தின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும், அமைதியான முறையில் போராட்டம் நடைபெற அனுமதி அளிக்க வேண்டும்,

மேலும், போராடும் விவசாயிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இணையச் சேவை தடையின்றி கிடைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல், அமெரிக்க எம்பி ஸ்டீவ் கோஹன் தனது ட்விட்டரில், “உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. கருத்துச் சுதந்திரமே எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் அடிப்படை. நான் விவசாயிகள் போராட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். இணையச் சேவை முடக்கம், அரசின் வன்முறை என பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்கள் அங்கு நடைபெறுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் ஸ்வால்வெல், “அமெரிக்காவும் சரி.. இந்தியாவும் சரி.. சிறு குறு விவசாயிகளால் கட்டமைக்கப்பட்ட நாடுகள். இதிலிருந்து நாம் விலக முடியாது. இந்தியா அமைதிக்கு ஆதரவாக இருக்க வேண்டும், சிறு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இணையச் சேவையை மீண்டும் வழங்க வேண்டும். போராடுபவர்களுக்கு எதிராகப் பாகுபாட்டை நிராகரிக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக விவசாயிகள்‌ போராட்டத்தில் ‌இரண்டு தரப்பும்‌ அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும்‌ என்று ஐ.நா மனித உரிமை ஆணையம்‌ கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தங்களது ட்விட்டர்‌ பக்கத்தில்,‌ “அமைதியான முறையில்‌ கூடுவது மற்றும்‌ கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை, அனைத்து வகையிலும்‌ பாதுகாக்கப்பட வேண்டும்.

நடைபெற்று வரும்‌ விவசாயிகள்‌ போராட்டத்தில்‌, அதிகாரிகளும்‌ போராடுபவர்களும்‌. அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம். அனைத்து வகையிலும்‌ மனித உரிமைகளை மதித்து, ஒத்த முடிவை எட்ட வேண்டியது மிகவும்‌ அவசியம்” என்றும்‌ ஐநா மனித உரிமை ஆணையம்‌ தெரிவித்துள்ளது.

இதுபோன்று விவசாயிகள் போராட்டத்திற்கு உலக நாடுகளிடம் குவியும் ஆதரவால் பாஜக மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி கவலையில் ஆழ்த்தியுள்ளது. விவசாயிகள் போராட்டம் தற்போது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு