சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.
4 ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதித்து சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள் விசாரித்து முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதன் பின்னர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிறை தண்டனையில் இருந்து மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.100 கோடி அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் அதனை நிராகரித்தது.
இதனை அடுத்து, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் தான் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால், அவரை குற்றவாளி என அறிவித்து அபராத தொகையை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இறந்தவரிடம் அபராத தொகையை வசூலிக்க சொல்வது எப்படி ஏற்க முடியும் என் கருதுவதால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் இறந்த ஒருவரிடம் அபராத தொகை வசூலிக்க முடியாது எனபது மறுபடியும் உறுதி ஆகி உள்ளது