கடந்த 4 ஆண்டுகளில் அதாவது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் சுமார் 35 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதாவது, கடந்த திங்கட்கிழமை சிக்கிமில் இந்தியாவின் 100வது விமான நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் 65 விமான நிலையங்கள் மட்டுமே இயங்கி வந்ததாகவும், பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 35 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பது என்னவென்றால், இந்தியா சுதந்திரம் அடைந்து 2014ம் ஆண்டு வரை 94 விமான நிலையங்கள் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மக்களவையில் விமானப் போக்குவரத்துத் துறை அளித்த பதிலில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 125 விமான நிலையங்கள் உள்ளன. இதில் 95 விமான நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. 31 விமான நிலையங்கள் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போல 2018ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், 101 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், இதில் 86 விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மோடி குறிப்பிட்டது போல வெறும் 65 விமான நிலையங்கள் இயங்கி வந்ததாகவும், தற்போது இது 100 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறுவதில் உண்மையில்லை என்பதும், பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 7 விமான நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தவறான தகவல் செய்தி வைரலாகி சமூகவலைதளத்திலே பிரதமர் மோடியை இதனால் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.